ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வாழ்ந்திருந்தார். அவர் சமீபத்தில் பல ஆயிரங்கள் கொடுத்து ஒரு குதிரையை வாங்கியிருந்தார். அதனை பண்ணையாருக்கு ஏற்ற வகையில் பழக்கப்படுத்த சில ஆட்களையும் நியமித்திருந்தார்.
புது இடத்துக்கு வந்ததாலோ என்னவோ அந்தக் குதிரை மிகவும் பயந்துபோயிருந்தது. தினமும் காலையில் அதை, தன் வீட்டிற்குமுன் இருக்கும் புல்வெளிக்கு அழைத்துவரச் செய்வார் பண்ணையார்.
பிறகு, தன் வேலையாட்களைவிட்டு அதன் மீது ஏறி, சுற்றிவரச் சொல்வார். ஆனால் அவர்கள் யார் தன்னருகே வந்தாலும் குதிரை பெரிதாக கனைத்து, இரு முன்னங்கால்களையும் உயர்த்தி அவர்களை விரட்டிவிடும்.
அந்த கிராமத்திற்கு சூஃபி ஞானி வந்தார். அவர் வந்திருப்பதை அறிந்ததும், அவரைச் சென்று பார்த்தார் பண்ணையார். தான் வாங்கிய குதிரை மிரண்டிருப்பதால் ஏற்பட்ட மனவருத்தத்தைக் கூறி, அதைத் தீர்த்து வைக்குமாறு ஞானியிடம் கேட்டுக்கொண்டார். ஞானி ஒருநாள் காலையில் பண்ணையார் வீட்டிற்குச் சென்றார்.
சூஃபி ஞானி முன்பு அந்த குதிரை கொண்டு வரப்பட்டது. மிகவும் உயர்ஜாதியைச் சேர்ந்த குதிரை அது என்பதை சூஃபி ஞானி கண்டு கொண்டார். ஒருமுறைப் பழக்கினாலே பளிச்சென்று பிடித்துக்கொண்டுவிடும் புத்திசாலியாகவும் அந்த குதிரை தோன்றியது. வேலையாள் ஒருவர் அதன்மீது தாவி ஏற முற்பட்டார். அது அவருக்கும் மேலாகத் துள்ளி அவரைத் தள்ளிவிட்டது.
அதைப் பார்த்த ஞானி வேலையாட்களிடம் அந்தக் குதிரையை கிழக்கு பார்த்தபடி நிறுத்திவைக்கச் சொன்னார். பிறகு அதனிடம் சென்று பரிவாகத் தடவிக் கொடுக்கச் சொன்னார். அதற்குப் பிடித்த தீவனத்தை அளிக்கச் சொன்னார். பிறகு அதன்மீது தாவி அமரச் சொன்னார். அதேபோல செய்தபோது குதிரை சிறிதும் முரண்டு பிடிக்கவில்லை.
தடவிக் கொடுக்கும் அன்பிலும், உணவு உட்கொண்டதால் பசி தீர்ந்த திருப்தியிலும் மட்டும் அது சமாதானமாகிவிடவில்லை. இன்னொரு முக்கிய காரணத்துக்காகத்தான் அது சாந்தமாயிற்று.
என்ன அது? குதிரையேற்றம் பழகிக்கொள்ளாத அந்த குதிரை, காலை வேளையில் தனக்குப் பின்னால் ஒளிரும் சூரிய ஒளியில் தன் நிழலும், தன்மீது ஏற முயல்பவரின் நிழலும் விழுவதைப் பார்த்து பயந்து விட்டிருந்தது. அதை ஞானி, கிழக்கு நோக்கி நிற்க வைத்தார். இப்போது அதன் நிழல் அதற்குப் பின்னால் விழவே, அதற்கு அந்த பயம் ஏற்படவில்லை; சமாதானமாகிவிட்டது.
OOPS Introduction
15 years ago
No comments:
Post a Comment