Saturday, February 28, 2009

ப்யூனுக்கும் பேராசிரியைக்கும் லவ்...! -போட்டு தாக்கும் 'பிஞ்சு மனசு'


'வணக்கம்மா' படத்தில் ராமர் வேடம் போட்டுக் கொண்டு 'ரோட்டோரம் ஒரு விரல் நீட்டி ஒதுங்கிய' ஒரே காரணத்திற்காக இந்துத்துவா அமைப்புகளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டார் சரவணன்! விஷயம் கொஞ்சம் ஆறட்டும் என்று அமைதியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அடுத்த படத்திற்கு போய்விட்டார் சரா!

இந்த படத்தின் பெயர் 'பிஞ்சு மனசு'. கல்லூரி ப்யூனுக்கும், அதே கல்லூரியில் பாடம் நடத்த வரும் பேராசிரிய பெண்மணிக்கும் லவ்! இந்த ஒரு வரி கதை ஒரு அதிர்வை தருகிறதல்லவா? அதே அதிர்ச்சிதான் சரவணனுக்கும். கதையை கேட்டவுடனேயே 'பிடிங்க கால்ஷீட்டை' என்று கூறியதுடன், படப்பிடிப்பில் மற்ற வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிற அளவுக்கு ஒன்றிப் போயிருக்கிறார் சரவணன்.

படத்தின் நாயகி தர்ஷாவுக்கு சொந்த ஊர் சிங்கப்பூர். 'ஆனாலும், நாங்க தமிழ் குடும்பம். என்னுடைய ஸ்பஷ்டமான தமிழில் இஷ்டமாகிதான் இந்த படத்தில் என்னை அறிமுகப்படுத்தியிருக்காங்க' என்கிற இந்த புதுமுகம், பத்தாவதுதான் படிக்கிறாராம். 'நயன்தாரா, த்ரிஷா மாதிரி பெரிய நடிகையா வரணும்' என்றார் கண்களில் லட்சிய பல்புகள் மின்ன!

படத்தின் இயக்குனர் ஜெய்ராம் மஞ்சள் கலரில் 'பிஞ்சு மனசு' என்ற பெயர் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருந்தார். இதென்ன யூனிபார்ம் மாதிரி என்றால், 'நான் மட்டுமா? அங்கே பாருங்க' என்றார். அவர் கைகாட்டிய திசையில் ஏழெட்டு இளைஞர்கள் இதே யூனிபார்மில் இருந்தார்கள். அசிஸ்டென்ட் டைரக்டர்களாம். சிஸ்டமேடிக்காதான் நடக்குது எல்லாமே! படமும் அப்படி இருக்கணும்...

Friday, February 27, 2009

'அப்படின்னா நான் கிளம்புறேன்...' -ரஹ்மானின் பாசாங்கும், பிரஸ்மீட்டும்!


ஆஸ்கர் விருதுடன் சென்னை வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்தார். சலசலப்பும், கலகலப்புமாக நடந்தேறியது இந்த சந்திப்பு. ஹாலுக்குள் நுழைந்த ரஹ்மானை வழக்கத்திற்கு மாறாக கைதட்டி வரவேற்றார்கள் அத்தனை பத்திரிகையாளர்களும். இந்த சந்தர்ப்பத்திற்காகவே பல யுகங்களாக காத்திருந்தது போல அவரை சூழ்ந்து கொண்டார்கள் புகைப்படக்காரர்கள்.

'நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். இங்கேதான் இருப்பேன். நிதானமாக எடுத்துக்கோங்க' என்று அவரே கேட்டுக் கொண்டும், யாரும் விலகுவதாக இல்லை. சுமார் அரை மணி நேரம் ஒரே தள்ளு முள்ளு. ஆனாலும் தனது புன்னகையை கொஞ்சமும் விலக்கிக் கொள்ளாத ரஹ்மான் 'மும்பையிலே பேட்ச் பேட்ச்சா எடுப்பாங்க. அதே மாதிரி நீங்களும் எடுங்களேன்' என்றெல்லாம் யோசனை சொன்னார். ம்ஹ¨ம், ஒருவரும் கேட்பதாக இல்லை. 'அப்படின்னா நான் போறேன்' என்று கோபித்துக் கொண்டு போவதுபோல பாசாங்கு காட்டினார் ரஹ்மான். அப்போதும் யாரும் அசருவதாக இல்லை. இப்படியே கழிந்தது அரை மணி நேரம். இறுதியாக பேச ஆரம்பித்தார் இசைப்புயல்.

வேடிக்கை என்னவென்றால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு ஹாலில் பிரிண்ட்டிங் மீடியாக்களும், இன்னொரு ஹாலில் டி.வி இன்டர்நெட், எஃப்எம் போன்ற எலக்ட்ரானிக் மீடியாக்களும்! முதல் சந்திப்பு தள்ளுமுள்ளு என்றால், இந்த எலக்ட்ரானிக் பிரிவு, அநியாயத்துக்கு டீசண்ட்! எந்தளவுக்கு என்றால், 'ரொம்ப டீசன்ட்டா இருக்காங்களே' என்று ரஹ்மானே வியக்கிற அளவுக்கு!

இனி கேள்வி பதில்...

ஆஸ்கர் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு எம்.பி. பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழ், இந்தி. ஆங்கில மொழிகளில் இசையமைக்கும்போது எந்த மொழி படம் உங்களுக்கு சுதந்திரமாக இருந்தது?

என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருப்பதாக உணர்ந்தேன்.

ஸ்லம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. நல்ல கதையம்சம் இருப்பதாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்திற்கு முழுமையாக ஈடுபாட்டுடன் இசையமைத்தேன். இத்தனைக்கும் இசைக்காக அவர்கள் ஒதுக்கியிருந்த பட்ஜெட் மிகவும் குறைவு. அதற்காக நான் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருந்தால், இந்த ஆஸ்கரை இழந்திருப்பேன்.

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் இந்த இரண்டு பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இரண்டுமே பிடிக்கலே...

வைரமுத்து எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எப்போ இசையமைக்க போறீங்க?

அவரு எழுதி கொடுத்ததும்! (சிரிப்பு)

உங்கள் இசையில் சிம்பொனி எப்போது வரும்?

அதுக்கு இன்னும் டைம் ஆகும்.

ஆஸ்கருக்கு அடுத்து உங்கள் முயற்சி?

திருக்குறளுக்கும், குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களுக்கும் இசையமைக்க போகிறேன்.

தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

நல்ல படங்களாக இருந்தால் இசையமைப்பேன்.

உங்களை நடிக்க அழைத்தால் ஹீரேவாக நடிப்பீர்களா?

எனக்கு நடிக்க நேரம் இல்லை.

இளையராஜா உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

யுவன்சங்கர் ராஜா எனக்கு ஈ-மெயிலில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அப்பாவும் குடும்பமும் வாழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

உங்களை ஓபாமா பார்க்க விரும்பினாராமே?

தெரியாது.

இலங்கை விஷயத்திலே நீங்கள் பேசினால் கவனிக்கப்படும். அங்கே அமைதி திரும்ப வேண்டும்னு பேசுவீங்களா?

போர் நடக்கணும்னு யாருதான் விரும்புவாங்க. அங்கே அமைதி திரும்பணும். இலங்கை தமிழர்களுக்காக நான் 'வெள்ளை பூக்கள்' என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைச்சிருக்கேன். அங்கு அமைதி திரும்பனும்னு பிரார்த்தனை செய்கிறேன்.

தமிழ் திரையுலகம் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தனும்னு முடிவு செஞ்சுருக்கு. எப்போ தேதி கொடுப்பீங்க?

ரொம்ப சீக்கிரம்.

தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்குமா?

அங்கேயுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் படத்தை வாங்கினா கிடைக்கும்.

ஸ்லம்டாக் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தாராவிக்கு ஏதாவது செய்ய விரும்புறீங்களா?

இப்பவே அது டூரிஸ்ட் ஸ்பாட்டா ஆயிடுச்சு. உலகத்தின் பார்வை இப்போ தாராவியில் இருக்கு.

எல்லா கேள்விகளுக்கும் இப்படி நறுக்கு தெறித்தார்போல சுவையாகவும், ஜாலியாகவும் பதில் சொன்ன ரஹ்மான், பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்பினார். நள்ளிரவு வரைக்கும் கூட அவரது வீட்டிற்கு சென்று, பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

யானை மீது ஊர்வலம்? அலறிய ஆஸ்கர் நாயகன்!


தமிழனின் எண்பது ஆண்டுகால 'பிளாக் அண் ஒயிட்' கனவில், தன்னையே வண்ணமாக நிரப்பி, நமது நீண்டகால 'கன்னித்தீவு' கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! கோடம்பாக்கத்திலிருந்து 'கொடாக்' (ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம்) வரைக்கும் பயணித்த ரஹ்மான், உலகமே கவனித்து வந்த அந்த மேடையில் தமிழில் பேசியதுதான் ஹைலைட்!

"நான் இங்கு ஒருவித அச்சத்துடனும், அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ எனது திருமணத்திற்கு வருவது போல படபடப்பாக இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு தாயை தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி. அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி"

"இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தனது தாய் மொழியில் பேசினார். புரியாவிட்டாலும் கைதட்டி ரசித்தது உலகம்!

ஆரம்பகாலங்களில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக ரஹமான் வாங்கிய சம்பளம் வெறும் ஐம்பது ரூபாய். இன்றைய தேதிக்கு ஆஸ்கர் விருதின் மதிப்பு என்னவென்று தெரியுமா? கிட்டதட்ட நு£று கோடிகள்! (இதில் ஒரு ரூபாயை கூட வரியாக வசூலிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமல்ல, இசைப்புயலுக்கு நிரந்தர வரிவிலக்கு அளிக்கவும் யோசித்து வருகிறது)

பணமாக இவ்வளவு என்றால், பிற சலுகைகள் அம்மாடியோவ்... மூன்று வருடங்களுக்கு இலவசமாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும், எந்த ஃபிளைட்டில் வேண்டுமானாலும் பறக்கலாம். உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் எத்தனை ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹோட்டலில் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். மொத்த பில்லையும் ஆஸ்கர் கமிட்டியே ஏற்றுக் கொள்ளும்! அதுமட்டுமல்ல, உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் வைக்கப்படுவார் ரஹ்மான்! செல்லும் நாடுகளில் எல்லாம் கவுரவ பிரஜையாக அங்கீகரிக்கப்படுவார்! இப்படி சலுகை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரராகிவிட்ட ரஹ்மானின் ஆரம்ப காலமும் சரி, வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போதும் சரி, அவர் ஒரே மாதிரிதான் என்று வியக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இசைஞானி இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக இருந்தவர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனின் ஆரம்பகாலங்கள் பற்றி நம்மிடம் பேசினார் எஸ்.ஏ.ராஜ்குமார். "சின்னப்பூவே மெல்லப் பேசு, புது வசந்தம், மனசுக்குள் மத்தாப்பூ போன்ற படங்களுக்கு நான் இசையமைத்தபோது என் குருப்பில் கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். புதுமையான சிந்தனையுள்ளவர். எல்லாவற்றையும் புதுசா செய்யனும் என்ற நோக்கம் அவரிடம் அப்பவே இருந்திச்சு. நாங்க ஏழு மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளே ரெக்கார்டிங் செய்வோம். ஆனால் அவரு வருவதே பதினொரு மணிக்குதான். அவரு மேலே கோபமே வராது. ஏன்னா, அவரது திறமைக்கு முன்னாடி இந்த லேட் பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அவரு உச்சத்துக்கு போன பிறகும் கூட, விடிய விடியதான் ரெக்கார்டிங் செய்வார். அவர் ஒரு இரவு பறவை" என்றார் மலரும் நினைவுகளோடு.

தொடர்ந்து ரஹ்மானின் நினைவுகளில் மூழ்கிய எஸ்.ஏ.ராஜ்குமார், "நான் இப்போ திரை இசை கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கேன். கோடம்பாக்கத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களுக்கான சங்கம் இது. இதில் ஆரம்ப காலத்திலிருந்தே உறுப்பினராக இருக்கிறார் ரஹ்மான். எந்த இசையமைப்பாளர் ரெக்கார்டிங் செய்தாலும், சங்கத்திற்கென்று குறிப்பிட்ட தொகையை கட்டணும்ங்கிறது எங்க சங்கத்தோட சட்டம். ஆச்சர்யம் என்னவென்றால், அவர் பாலிவுட், ஹாலிவுட் வரைக்கும் போனாலும், ஒவ்வொரு ரெக்கார்டிங்குக்கும் எங்களுக்கு பணத்தை கரெக்டாக அனுப்பி வைத்துவிடுவார்"

"ஓரளவுக்கு வளர்ந்திட்டாலே, வளர்ந்த இடத்தை மறந்துவிடுகிறவர்களுக்கு மத்தியிலே ரஹ்மானின் இந்த செயலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? நாங்க எல்லாரும் சேர்ந்து திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக மார்ச் ஒன்றாம் தேதி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா வச்சிருக்கோம். கோல்டன் குளோப் வாங்கிய அன்னிக்கு அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அப்படியே இந்த விழாவுக்கும் தேதி வாங்கினோம். அப்போது "யானை மீது உங்களை உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்போறோம்" என்று சொன்னதற்கு அவர் வெட்கப்பட்டு பதறியதை பார்க்கணுமே! இந்த விழாவில் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, ஏவிஎம்.சரவணன் ஆகியோர் கலந்துக்கிறாங்க" என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

இசையை பற்றி பேசுகிறபோது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே ஒரு ஒப்பீடு எப்போதுமே இருந்து வருகிறது மக்கள் மத்தியில். அப்படியிருக்க, இளையராஜா ஒப்புக் கொண்டாரா? இந்த கேள்வியை ராஜ்குமாரிடம் வைத்தோம்.

"மற்றவர்கள் நினைப்பது போல அல்ல ராஜா அண்ணன். அவரது திருவாசகம் இசை வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடந்தது. அவரை மேடையில் கொண்டு போய் உட்கார வைக்க இரண்டு இசையமைப்பாளர்கள் போக வேண்டும். எல்லாருக்குமே ஆசை இருந்தது. ஆனால், இசைஞானி விரும்பியது என்னையும் ரஹ்மானையும்தான். நாங்கள் கைபிடித்து அவரை அழைத்து சென்று அமர வைத்தோம். இந்த விழாவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் அழைத்தபோது முகமெல்லாம் மலர, "கண்டிப்பா வரேன்" என்று அவர் சொன்னது இப்போதும் என் கண்களில் நிற்கிறது" என்றார் ராஜ்குமார்.

'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்ற உங்கள் நம்பிக்கை தன்னம்பிக்கையை குறைப்பதாக இல்லையா? என்று கேட்கப்பட்டது ரஹ்மானிடம். அதற்கு அவர் சொன்ன பதில், "தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்!"

ரஹ்மானின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் அந்த இறைவனும்தானே!

'வுமன்ஸ் காலேஜிலும், மச்சி குவார்ட்டர் சொல்லேன்...' -நடிகர் ஜீவா பெருமிதம்!


கிரீன் பார்க் வளாகத்தில் நடிகர் ஜீவாவை பார்த்தோம். கவனிக்காமல் போய் கொண்டிருந்தவரின் காதில் விழுகிற மாதிரி, 'மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்று குரல் கொடுத்தோம். நம் நம்பிக்கைக்கு வெற்றி! "அட, இங்கே எப்பிடி?" என்றபடியே அருகில் வந்தார்.

'நீங்க ஜீவான்னு கூப்பிட்டிருந்தா கூட திரும்பி பார்த்திருப்பேனான்னு தெரியலே. இப்போ போகிற இடத்திலே எல்லாம் 'மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்'னுதான் குரல் கொடுக்கிறாங்க. அட, போன வாரம் ஒரு வுமன்ஸ் காலேஜூக்கு சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்க. அந்த பசங்க கூட, மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்னு கத்துதுங்க. யப்பா... பொம்பளை புள்ளைங்க ரொம்ப ஷார்ப்பும்மா' என்றார் முகமெல்லாம் மலர்ச்சியாக!

நல்ல நல்ல படமா பண்ணிட்டு இருந்தீங்க. திடீர்னு கன்னாபின்னா கமர்ஷியல் ரூட்டை பிடிச்சிட்டீங்களேன்னு கேட்டா, ஜீவா சொன்ன பதில் ரொம்ம்ம்ப முக்கியம்! 'ஏன் சார், நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா? நல்ல படத்தை வச்சிகிட்டு நான் என்ன பண்றது? படம் ஓட வேணாமா? அதான் ரூட்டை மாத்திட்டேன். தியேட்டருக்கு போய் பார்த்தா ஒரே எளசுங்க கூட்டம். நக்கலும் நையாண்டியுமா படம் பார்க்கிறாங்க. அவங்க சந்தோஷத்தை பார்ப்பேனா, அவங்களை அழ வைச்சு பார்ப்பேனா? இப்போதெல்லாம் அட்வைஸ் ஆசாமிகளா கண்டா, தொடர்பு எல்லைக்கு வெளியே போயிடுறது நம்ம பாலிசி. நீங்க எப்படி?' என்றார்.

ஜீவா தொடர்பு எல்லைக்கு உள்ளேயே இருக்கனும்ங்கிறதுதானே நம்ப பாலிசி!

பொதுமக்களுக்கு ஸ்வீட்! ஜெய், பூர்ணா சேர்ந்து விநியோகம்!


இன்னும் ஒரு வருடம் ஆனாலும் ஆஸ்கர் கொண்டாட்டம் ஓயாது போலிருக்கிறது. ஜெய், பூர்ணா நடிக்கும் 'அர்ஜுனன் காதலி' படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த செய்தி அறிந்ததும் யூனிட்டே கலகலப்பானது.

ஏற்கனவே நன்றாக பாடுகிற திறமை உள்ள ஜெய், ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைப்பதற்கு காரணமாக இருந்த 'ஜெய் ஹோ' பாடலை சத்தம் போட்டு பாடவே ஆரம்பித்து விட்டார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஷ¨ட்டிங்கிற்கு 'பேக்கப்' சொன்ன இயக்குனர் பார்த்தி பாஸ்கர், பக்கத்து டவுனிலிருந்து பத்தாயிரம் வாலா பட்டாசு வாங்கி வரச்செய்து, வெடி வெடித்து கும்பகோணம் ஏரியாவையே கிடுகிடுக்க வைத்துவிட்டார்.

பூர்ணாவும், ஜெய்யும் தங்கள் செலவிலேயே ஏராளமான ஸ்வீட்களை வாங்கி வந்து பொதுமக்களுக்கு விநியோகித்தார்கள். ஃபிகரும் சுகரும் ஒன்னா வந்தா, இரட்டை இனிப்பு! அதுவும் ரஹ்மானுக்காக என்கிறபோது, ஏக தித்திப்பு!

விவேக்கே... விருதை வீசி எறியுங்கள்! -கங்கை அமரன் ஆவேசம்!


மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ§க்கு அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்தியது ப்ரியாவிஷன்! ஆர்.எம்.வீரப்பன், ராதாரவி, எஸ்.வி.சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் கங்கை அமரனின் பேச்சுதான் கடா முடா...!

சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விவேக்கை ஒரு பிடி பிடித்தார். 'கொடுக்க வேண்டியதை கொடுத்து பட்டத்தை வாங்கிக்கிறாங்க. அந்த கமிட்டிகளில் உள்ளவர்கள் பலரை எனக்கு தெரியும். கிட்டதட்ட ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு தொகை போகிறது என்பதும் எனக்கு தெரியும். இப்போது நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பு வந்ததும் விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? நகைச்சுவைக்கே Vivekஅரசன் நாகேஷ். அவருக்கு கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்னு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். பட்டம் பட்டம்னு ஏன்யா இப்படி அலையுறீங்க?

கடைசியா விவேக்கிற்கு சொல்லிக் கொள்கிறேன். இப்பவும் ஒண்ணும் கொறஞ்சு போயிடல. இந்த பத்மஸ்ரீ விருது எனக்கு வேணாம். எங்க நாகேஷ் ஐயாவுக்கு கொடுக்காத பட்டமும் விருதும் வேணாம்னு தைரியமாக மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அறிவிக்கனும். விவேக்கே... விருதை வீசி எறியுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா, இந்த திரையுலகத்தை திரட்டி நானே உங்களுக்கு பாராட்டு விழா எடுக்கிறேன்' என்றார் கங்கை அமரன்.

இதெல்லாம் விவேக்கின் காதில் விழாமலா இருக்கும்?

Thursday, February 26, 2009

லாரன்ஸ், லட்சுமிராய் - புதிய ஜோடி


உடம்பில் மச்சமிருக்கும், லாரன்சுக்கு அப்படியே உல்டா. உடம்பே இவருக்கு மச்சம். ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறவர் அடுத்து இரண்டு பேருடன் காதல் பு‌ரிய உள்ளார்.
கல்பாத்தி எஸ். அகோரம் தயா‌ரிக்கும் படம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம். (முதலில் வைத்த பெயர் இருட்டு குகையில் முரட்டு சிங்கம்). சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் லாரன்ஸ் ஹீரோ. கௌபாய் கதையான இதில் பத்மப்‌ரியா, லட்சுமிராய் இருவரும் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். கௌபாய் கதை என்பதால் மர பீப்பாய் அடுக்கப்பட்ட டெக்சாஸ் பா‌ரில் கிளப் டான்ஸ் ஒன்று நிச்சயம் உண்டு. ஜெய்சங்க‌ரின் கௌபாய் படங்களை இப்போது பார்த்தாலும் சலிக்காது. முரட்டு சிங்கம் ப்ரெஷ்ஷான தயா‌ரிப்பு. தித்தித்தாலும் திகட்டாது.

மதுமிதாவுக்கு டும்டும்டும்!


குடைக்குள் மழை படத்தில் பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதாவுக்கும், நடிகர் சிவபாலாஜிக்கும் மார்ச் 1ம் தேதி திருமணம் நடக்கிறது. இது ஒரு காதல் திருமணம்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. குடைக்குள் மழையில் அறிமுகமானவர் பின்னர், தொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன், நாளை உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அமீர் ஜோடியாக யோகி மற்றும் சொல்ல சொல்ல இனிக்கும் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஆர்யா உள்பட பல படங்களில் நடித்தவர் சிவபாலாஜி. இவர் ஒரு தொழிலதிபரும் கூட. தமிழில் சத்யராஜ் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக அவர் நடித்தபோது, அப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது.

நட்பு வழக்கம்போல காதலாக மலர்ந்தது. பிறகு இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர். இவர்கள் திருமணம், மார்ச் 1-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என மதுமிதா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 25, 2009

100 தியேட்டர்களில் தமிழ் ஸ்லம்டாக் 'நானும் கோடீஸ்வரன்'


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுக் கொடுத்துள்ள ஆங்கிலப் படமான ஸ்லம்டாக் மில்லியனர், தமிழில் 'நானும் கோடீஸ்வரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி 100 தியேட்டர்களில் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இங்கிலாந்து தயாரிப்பாளர்கள், இயக்குநரால் உருவாக்கப்பட்டு, இந்தியக் கலைஞர்களின் நடிப்பிலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் உருவான ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கிலப் படம், ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்ஸார் ஆகிய இந்தியர்களுக்கும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த ஆங்கிலப் படம் தற்போது நானும் கோடீஸ்வரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்வதற்கான உரிமை ரூ.50 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. பால்கன் பிலிம்ஸ் நிறுவனம் இந்த உரிமையை பெற்றது.

இரு வாரங்களாக டப்பிங் பணிகள் நடந்தன. கதாநாயகன் தேவ் படேலுக்கு நடிகர் சிம்பு தமிழில் டப்பிங் குரல் கொடுத்தார். அனில்கபூருக்கு பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப் பிரமணியம் குரல் கொடுத்தார். தமிழில்

நானும் கோடீஸ்வரன் படம் 27ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது. மொத்தம் 100 தியேட்டர்களில் இது திரையிடப்படுகிறது. சென்னையில் மட்டும் 7 தியேட்டர்களில் இப்படத்தைக் காணலாம்.

கோல்டன் குளோப் விருது கிடைத்ததுமே இப்படத்தை தமிழில் வெளியாக ஏற்பாடுகள் நடந்தன. தற்போது ஆஸ்கர் விருதையும் அள்ளியுள்ளதால், படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரீதா பின்டோவுக்கு இன்னொரு ஹாலிவுட் படம்


ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகியான ப்ரீதா பின்டோவுக்கு இன்னொரு ஹாலிவுட் படம் கிடைத்துள்ளது. ஸ்லம்டாக் படம் ஆஸ்கர் வென்ற அடுத்த நாளே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.

பிரபல இயக்குநர் உடி ஆலன் இயக்கப் போகும் புதிய படத்தில் பிரீதா நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து பிரீதாவின் சகோதரி ஷரோன் பின்டோ கூறுகையில், உட்டி ஆலன் படத்தி்ல் நடிக்கவுள்ளார் பிரீதா. தற்போது தனது ஹாலிவுட் வாய்ப்புகள் குறித்து தனது லாஸ் ஏஞ்சலெஸ் ஏஜென்ட்டுடன் பிசியாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

ஆனி ஹால், கிரைம்ஸ், மிஸ்டெமனூர்ஸ், ஹஸ்பன்ட் அன்ட் வைப்ஸ், புல்லட்ஸ் ஓவர் பிராட்வே உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஆலன்.

மியா பாரோ என்பவர் ஆலனின் முன்னாள் மனைவி ஆவார். இருவரும் விவாகரத்து செய்து கொண்டு விட்டனர். விவாகரத்துக்கான காரணமாக பாரோ நீதிமன்றத்தில் கூறிய காரணம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களது வளர்ப்பு மகள் ஒருவருடன், ஆலன் தவறான உறவு வைத்திருந்தார் என்று கோர்ட்டில் கூறி விவாகரத்து பெற்றார் பாரோ.

இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் ஆலன் தடம் புரண்டிருந்தாலும் கூட, திரையுலகில் அவருக்கென்று பெரிய பெயர் உள்ளது. சிறந்த வசனகர்த்தாவாகவும் அறியப்பட்டவர் ஆலன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலனை விடுவோடம், பிரீதா இப்போது லாஸ் ஏஞ்சலெஸில் படு பிசியாக இருக்கிறாராம். ஒரே பேட்டி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது என ஓடிக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுகளைக் குவித்த படத்தின் நாயகி என்பதால் அவரது பேட்டி எடுக்க அமெரிக்க மீடியாக்கள் மும்முரமாக
உள்ளன.

அவரது நிலை எங்களுக்குப் புரிகிறது. அவர் சுதந்திரமாக இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே நாங்களும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. தொடர்ந்து போனில் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம் என்கிறார் ஷரோன்.

அழுவாச்சி தொடர்கள்...-காய்ச்சி எடுக்கும் த்ரிஷா!


டிவி சீரியல்கள் எல்லாமே பெண்களுக்கு எதிராகவும், பெண்களை அடிமைப்படுத்தும் விதத்திலும் அழுகைத் தொடர்களாகவே உள்ளன.
இவற்றில் கதை என்ற விஷயம் மருந்துக்கும் கிடையாது. இதைப் போய் மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ என்று பொரிந்து தள்ளுகிறார் நடிகை த்ரிஷா. சமீபத்தில் படப்பிடிப்பில் நிருபர்களை சந்தித்த த்ரிஷாவிடம் டிவி சீரியல்களில் நடிப்பது குறித்து ஒருவர் கேட்டுவிட, சடாரென்று சூடானார் த்ரிஷா.

"இப்போது வரும் டி.வி. சீரியல்களில் என்ன கதை இருக்கு? என் அம்மா எப்போதும் டி.வி. தொடர்களில் மூழ்கி கிடப்பார். ஒரு தொடரையும் விடமாட்டார். ஒரு வாரம் கழித்து டி.வி. தொடரை பார்த்தாலும் கதை நகராமல் அப்படியே நின்ற இடத்திலேயே நிற்கும். அதை போய் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். இவற்றில் நடிப்பது பற்றி நான் எப்போதும் யோசிக்கக் கூட மாட்டேன்.

இன்னொன்று இந்தத் தொடர்கள் எல்லாமே பெண்களுக்கு எதிராகவே இருக்கு. பெண்ணா பிறந்துட்டா அடங்கிப் போகணும் அடுக்களையே கதின்னு கிடக்கணும்... எதிர்த்துப் பேசக்கூடாது... இதெல்லாம்தான் இந்த டிவி சீரியல்களில் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

எல்லா தொடர்களிலும் யாராவது ஒரு கேரக்டர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவோ அல்லது அல்லது அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுப்பவர் போலவோ நிச்சமயம் வருவார்.

அடங்கிப் போகணும் எல்லை மீறக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது என்றெல்லாம் மகள்களுக்கு தாய்மார்கள் போதனை சொல்லும் காட்சிகளும் நிறைய வருகின்றன. பாட்டிமார்கள், தாய்மார்கள் எல்லோருமே இளம் பெண்களை கட்டுப்படுத்துவது போலத்தான் காட்சிகளை அமைக்கிறார்கள்.

ஆனால் பொதுவாகவே பெண்களின் இன்றைய நிலை பெரிதாக மாறியிருக்கிறது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்... எனக்கு பூரண சுதந்திரம் கொடுத்துள்ளார் என் அம்மா. என்னுடைய தோழிகளின் அம்மாக்களும் கூட அப்படித்தான்.

வெளியே போகக்கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எங்களை கட்டுப்படுத்தியது இல்லை கல்லூரி நாட்களில் படிக்கும் போது நல்லா படிப்பேன். ஓய்வு கிடைத்தால் அம்மாவிடம் சொல்லிவிட்டு தோழிகளுடன் சுற்ற கிளம்பி விடுவேன். என் தாய் தடுக்க மாட்டார்..." என்றார் த்ரிஷா.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

இதுதாங்க புது முயற்சி... யுவன்சங்கர் ராஜா மகிழ்ச்சி


விழிக்கு கொஞ்சமும், செவிக்கு நிறையவுமாக ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்த் டிவியின் உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார். ஆல்பத்தின் பெயர் 'விழியும், செவியும்' மொத்தம் ஒன்பது பாடVizhiyum Seviyumல்களில் ஒன்று மட்டும்தான் வீடியோ ஆல்பம்! இதில் வசந்த குமாரின் வாரிசு விஜய் வசந்தும், மும்பை மாடல் அழகி கரோலினாவும் ஆடியிருக்கிறார்கள். இந்த விஜய், சென்னை 28 மற்றும் தோழா படங்களில் நடித்தவர்.

பெரும் பொருட் செலவில் இந்த ஆல்பத்தை தயாரித்திருப்பவர் வி.வினோத்குமார். இவரும் வசந்தகுமாரின் வாரிசுதான். (ஒருத்தரும் அரசியல் பக்கம் வரலையே?) சமி யூசுப், பிரேம்ஜ் அமரன், டாக்டர் பேர்ன் ஆகியோர் இசையமைத்திருக்கும் இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. வசந்தகுமார் வெளியிட, யுவன்சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.
'தமிழில் இதுபோன்ற இசை ஆல்பம் குறித்த விழிப்புணர்வு இசையுலகத்திலும் இல்லை. தமிழ் சினிமாவிலும் இல்லை. இது போன்ற இசை ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் வினோத்குமார் தமிழ் சினிமாவில் இசை ஆல்பத்திற்கான புது முயற்சியை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்' என்றார் யுவன்!

பிரேம்ஜி அமரன், கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, டிம்மி, டாக்டர் பேர்ன், பிரசன்னா, அபிலேஷ். கார்த்திகேயன், பிராதிபா, ஐஸ்வர்யா, வேலு, மேகா, சுபாஷிணி... (ஆங்... இருங்க முடிச்சிடுறேன்) வினோத் ஆகிய ஒரு டஜன் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.

சரி, ஆல்பத்தின் 'தீம்' என்னவாம்? வேறென்ன, உலகத்தை பித்து பிடித்து அலைய வைக்கும் காதல்தான்!

மறுபடியும் ஒரு விருது... மகிழ்ச்சியில் இயக்குனர்!


ரயில் போன பிறகும் 'தடக் தடக' சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சுப்ரமணியபுரத்தின் வெற்றி செய்திகளைதான் சொல்கிறோம். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது மாதிரி திரையிட்ட இடமெல்லாம் பாராட்டுகளை குவித்து வரும் சுப்ரமணியபுரத்திற்கும் மேலும் ஒரு சிறப்பு....

இப்படத்திற்கு மலையாள படவுலகம் மிகவும் மதிக்கும் மாத்ருபூமி விருது கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் வழக்கமான தடத்தை உடைத்து புதுத்தடம் பதித்த படம் என்ற விருதை சுப்ரமணியபுரத்திற்கு அளித்து கௌரவித்திருக்கிறது மாத்ருபூமி.

இந்த விருது வழங்கும் விழா அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்தது. 100 நாட்களை தாண்டி கேரளாவில் ஓடிய இப்படத்தின் நடிகர், நடிகைகள், துணை கதாபாத்திரங்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து சிறப்பித்தார்கள்.

'சினிமாவுக்கு இனம், மொழி, மதம், ஜாதி, என்பது கிடையாது என்பதை நிரூபிக்குமSubramayapuram் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. நல்ல சினிமா வரும்போது ஜாதி, மதம், மொழிகளை கடந்து வரவேற்பார்கள். கௌரவிப்பார்கள் என்று நிரூபித்த கேரள மக்களுக்கும் விருது வழங்கிய மாத்ரூபூமிக்கும் கோடி நன்றிகள்' என்றார் படத்தின் இயக்குனர் சசிக்குமார்.

மேடையேறிய இவரை மலையாள தேசத்தின் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் வரவேற்றார்கள்.

இந்திரவிழா இயக்குனருக்கு ஆஸ்கர்? -விவேக் நம்பிக்கை...


உரிச்ச கோழிக்கு ரவிக்கையை மாட்டின மாதிரி பட்டும் படாமல் வந்திருந்தார் நமீதா! ஹாய் மச்சான்ஸ்' என்று ரவுண்டு கட்டுவார் என்று எதிர்பார்த்தால் அடக்கம், அடக்கம் அப்படியரு அடக்கம்! மேடையில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாலுமகேந்திரா இருந்தது காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும், ஸ்ரீகாந்த்தை 'என்னோட மச்சான்' என்று அழைக்க, புன்முறுவல் பூத்தது பொதுஜனம்! 'இந்த படத்தில் நான் நடிச்சிருக்கேன்' என்றார் நம்பிக்கையோடு. பார்க்கலாம்!

நொடிக்கொரு சிரிப்போடு நம்மை குலுங்க வைப்பார் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் அமலனால் அழைக்கப்பட்ட விவேக், நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. 'பாரதியார், ம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று கவிதை எழுதினார். அதே பாணியில் வைரமுத்து சார் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ம் என்றால் ஊர்வசி... ஏனென்றால் ஈஸ்வரி என்பது அந்த பாடல்' என்று சொல்ல, கவிப்பேரரசுவுக்கே முகம் கொள்ளாத சிரிப்பு. 'ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறார். இந்திரவிழா படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வரும் அப்படி திறமை படைத்தவர்தான். ஆங்கில இலக்கியங்களை பற்றியும், ஹாலிவுட் சினிமா பற்றியும் ஏராளமாக தெரிந்து வைத்திருக்கிறார்' என்று பாராட்டினார் விவேக்.

பின்னாலேயே பேச வந்த பாலுமகேந்திரா ரஹ்மான் குறித்து சொன்ன தகவல், புதுசு ப்ளஸ் ஆச்சர்யம். ரோஜா படமும், தேவர் மகன் படமும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருது கமிட்டிக்கு வந்தது. எந்த இசையமைப்பாளரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். விருது குழுவின் தலைவர் பாலுமகேந்திராவேதான். என்ன செய்தார்? ஒரு சினிமா போல சுவாரஸ்யமாக விளக்கினார் பாலுமகேந்திரா.

'நான் ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டு உறுப்பினர்களை போட சொன்னேன். ஆனால், இருவருக்கும் ஏழு ஏழு ஓட்டுகள் சரி சமமாக கிடைக்க, மறுபடியும் சிக்கல். வேறு வழியில்லாமல் நான் ஓட்டு போட வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் நண்பர் இளையராஜா. மறுபக்கம் இருபது வயதே நிரம்பிய இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான். என்ன செய்வது? ஆனாலும், இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கு போட்டு ஜெயிக்க வைத்தேன்' என்றார் பலத்த கரவொலிக்கிடையில்!

முன்னதாக திரையிடப்பட்ட இந்திரவிழா பாடல்களை பற்றி எழுதினால், மீண்டும் உரிச்ச கோழி சமாச்சாரத்திற்கு போகணும். அதனால், இப்போதைக்கு ஜுட்!

மணிரத்னத்தின் பெயர் இல்லையே? ரஹ்மானின் விழாவும், விளக்கமும்!


டபுள் ஆஸ்கர் வென்று இம்மாதம் சென்னை திரும்பும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மார்ச் 1 ந் தேதி திரை இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த சங்கத்திற்கு சொந்தமான அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிதான் ஆஸ்கருக்கு பிறகு இசைப்புயலுக்கு நடைபெறவிருக்கும் முதல் பாராட்டுவிழா. 2 கிலோ எடையுள்ள வெள்ளியில், உலக உருண்டை ஒன்றை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற நினைவு பரிசை ரஹ்மானுக்கு வழங்கப் போகிறது இந்த சங்கம்.

முக்கிய செய்தி என்னவென்றால் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இவர்களோடு இசைஞானி இளையராஜாவும் கலந்து கொள்கிறார் இந்த நிகழ்ச்சியில். ரஹ்மானை முதலில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் பெயர் அழைப்பிதழில் இல்லையே என்ற கேள்வியோடு சங்கத்தின் தலைவரும், இசையமைப்பாளருமான எஸ்.ஏ.ராஜ்குமாரை சந்தித்தோம்.

'திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்கிற விழா இது. தாய் வீட்டின் சார்பில், உலகத்தை வென்று வந்திருக்கும் எங்கள் குழந்தைக்கு நடத்துகிற பாராட்டு விழா இது. அதனால்தான் இசைக்கலைஞர்களையும், இசை அறிஞர்களையும் இந்த விழாவில் முன்னிலை படுத்துகிறோம். மணிரத்னத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயம் இந்த விழாவில் அவரும் கலந்து கொள்வார்' என்றார்.

கோல்டன் குளோப் விருது கிடைத்தவுடனேயே ரஹ்மானை சந்தித்து இந்த விழாவுக்கான தேதியை வாங்கினார்களாம். அதற்கு பிறகுதான் அவருக்கு ஆஸ்கர் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள இசைஞானியை அழைத்த போது, முகமெல்லாம் மலர்ச்சியோடு 'வருகிறேன்' என்று சம்மதித்தார். ரஹ்மானின் இந்த சாதனை எங்களுக்கெல்லாம் பெருமை என்றார் கொள்ளாத சந்தோஷத்துடன்!

Tuesday, February 24, 2009

ரஹ்மானுக்கு பாராட்டு விழா-இளையராஜா வாழ்த்துகிறார்


சென்னை: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா எடுக்கப்படுகிறது. மார்ச் 1ம் தேதி நடக்கும் இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

இதுகுறித்து திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:


திரை இசைக் கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள சங்க ஆடிட்டோரியத்தில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்திய இசைக் கலைஞரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி கெளரவப்படுத்தும் விழாவை வண்ணயமாக எடுக்கவிருக்கிறோம்.

மேலும் அவர் பெற்ற கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா விருதுகளுக்காகவும் பாராட்டவிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில், செவாலியர் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா தலைமை விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக ஏவி.எம். சரவணன், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு, ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி பேசவிருக்கிறார்கள்.

இந்த மாபெரும் விழாவில், திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பிரபல பாடகர், பாடகியர், அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்தியாவின் புகழ் பெற்ற இசை வல்லுநர்களும், இசை நட்சத்திரங்களும் விழாவை அலங்கரிப்பார்கள்.

விழா ஏற்பாடுகளை தலைவர் கே.என்.ராமசுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஆபு கபிரியேல், டிரஸ்ட் சேர்ன் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், டிரஸ்ட் செயலாளர் கல்யாண், பொருளாளர் பி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் முன்னிருந்து செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை சன் டிவி பிரத்யேகமாக ஒளிபரப்பவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வரவேற்பு:

இதற்கிடையே ரஹ்மான் வரும் 28ம் தேதி சென்னை திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் திரையுலகமே திரண்டு அவருக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

வைகோ வாழ்த்து...


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,

இசை உலகில் ஈடில்லாப் பேரரசனாய் இமாலய புகழ் பெற்றார் ஏ.ஆர். ரஹ்மான். அகிலம் போற்றும் இசை மேதை மொசார்ட் மீண்டும் சென்னையிலே பிறந்து விட்டார் என்று அனைத்து நாட்டு இசையன்பர்களின் விழிகளும், செவிகளும் தமிழகத்தின் பக்கம் திரும்பச் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் போது, அந்த விண்முட்டும் புகழை ஈட்டியவர் நம் தமிழரல்லவோ என்று தமிழர் மனமெல்லாம் தித்திக்கிறது. ஆனந்த கும்மாளமிடுகிறது.

இசைக்கலையை உலகுக்கு முதலாவது தந்தவன் தமிழன். அத் தமிழ்குலத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைக்கலையால் உலகத்தை வென்று விட்டார். வாழ்க அவர் பல்லாண்டு! வாழ்க அவரது சாதனைகள் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை ஈன்ற தமிழ்நாட்டில் பிறந்த மகனின் புகழைக்கண்டு பெற்ற தாய் எந்த அளவுக்கு உள்ளம் மகிழ்வாரோ, அந்த அளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

விருது பெற்றவுடன் "எல்லாப்புகழும் இறைவனுக்கே'' என்று அங்கே தமிழ் ஒலித்தது. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் பெருமையை தேடி தந்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை உலகே ஆவலாக கேட்க அவர் தமிழில் பேசினார்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் உச்சாணிக்கிளைக்கு செல்வார்கள் என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன்...

நடிகர் கமலஹாசன் கூறுகையில், ஒரு இந்தியனுக்கு முதன்முதலாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்காக, சந்தோஷப்படுகிறேன். இதுதான் உண்மையான அங்கீகாரம்.

நம் நாட்டில் படம் எடுத்து, அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருது கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிவது, ஒரு இனிமையான அனுபவம். அவர் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வார். பழகுவதற்கு இனியவர். இந்த நிமிடத்தில் இருந்தாவது நம் படங்களில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அரைத்த மாவையே அரைக்காமல், புதுமையை கொண்டு வர வேண்டும் என்றார்.

கவிஞர் வைரமுத்து..

கவியரசு வைரமுத்து கூறுகையில்,

ஆஸ்கார் விருது என்பது உலக கலையுலகத்தின் கனவு. அந்த கனவு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருமுறை பலித்திருக்கிறது. இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவுக்கு ஒரு தமிழன் ஈட்டித்தந்த பெருமை இது. இசை என்பது தொழில் அல்ல; தவம். அந்த தவத்தை செய்தவருக்கு வரம் கிட்டியிருக்கிறது.

இளமையிலேயே விருது பெறுவது பெரிது; அரிது. முதுமையில் பெறுகிற விருது இறந்த காலத்திற்குரியது. இளமையில் பெறுகிற விருது எதிர்காலத்திற்குரியது. ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்த விருது பயன்படும்.

அவரை அறிமுகம் செய்த இயக்குனர் பாலசந்தர்-மணிரத்னம் இருவருக்கும் இந்த பெருமையில் பங்கிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் அன்னையாருக்கும், குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், நடிகர் சரத்குமார், பாஜக எம்பி திருநாவுக்கரசர், இயக்குனர் கே.பாலசந்தர், நடிகர் பிரபு ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் பார்த்திபன், `ஜெய் ஹோ' என்று எழுதப்பட்ட கேக் கை, ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு கொண்டு வந்து அதை வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

ஸ்லம்டாக்: ஒருவித்தில் என் கதைதான்!-ரஹ்மான்


ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் கதையைப் போலத்தான் என் வாழ்க்கையும் என்றாலும், நான் அந்தளவு போராடவில்லை என்றே நினைக்கிறேன் என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல நாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டி:

'ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். மும்பை சேரிப் பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?

முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் என்னிடம் பேசினார். டேனி தனது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய 'டிவிடி'யை பார்த்தேன். அதில் படம் குறித்த தகவல்கள் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். பின்னர் மூன்று வாரங்களில் இசையமைத்துக் கொடுத்தேன்.

இந்தப் படத்தின் கதை உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்ததா?

ஒரு விதத்தில் ஆமாம்... ஆனால் இந்த அளவுக்கு நான் போராடவில்லை என்றே நினைக்கிறேன். நானும் நடுத்தர குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்கள் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டன. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிற அளவுக்கு வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்குப் பின்னால் பெரும் போராட்டங்கள் இருந்தது உண்மைதான்.

பாய்ல் உங்களிடம் எந்த மாதிரியான இசையை எதிர்பார்த்தார்?

சென்டிமென்ட், சோகமான இசையே வேண்டாம் என ஆரம்பத்திலேயே அவர் கூறிவிட்டார். சில காட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதைக்கூட மாற்றும் வகையில்தான் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கையை வலியுறுத்தும் விதத்தில் இருக்கும் அந்த இசை.

'ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் இப்போதுதான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற்றுள்ளேன். இது புதிய அனுபவம். இனிமையாக, த்ரில்லிங்கான அனுபவம்.

நீங்கள் முதலில் பெற்ற சம்பளம்?

முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.

ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?

சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன். பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?

எலிசபத்' படத்திற்காக இது வரை எந்த இசையமைப்பாளரும் முயற்சித்திராத புதிய பாணியில் இசையமைத்தேன் என்றார் ரஹ்மான்.

உலகத்தின் உச்ச விருது அல்ல! ஆஸ்கர் பற்றி கமல்ஹாசன்!


ஆஸ்கர் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசன், ரஹ்மானுக்கு கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருது குறித்து என்ன சொல்கிறார் என்ற ஆவல் மக்களுக்கு எழுவது நியாயமே! இதோ, கமல்ஹாசனின் பாராட்டு அறிக்கை-

அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்கு கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதை கூறிவிட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித்ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்கு கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு அடுத்த பிரயாணத்திற்கு தயாராக இருக்க வேண்டும். இவருக்கு கிடைத்துவிட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ, அல்லது பொறமைப்பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக நடிகைகள்... ஆச்சர்யத்தில் கோடம்பாக்கம்!


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்த நடிகைகளில் பலர், சாமியாரிணிகளாக மாறி வருவது ஆச்சர்யம்தான்! வனிதா என்ற நடிகை மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் தங்கி முக்கால் சாமியாரிணியாக ஆகிவிட்டார். கோவை சரளாவும் திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். இந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை!

சமீபத்தில் வெளிவந்த 'வில்லு' படத்தில் கூட, விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த ரஞ்சிதாதான் அவர். பாரதிராஜாவின் அறிமுகமான இவர் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர். மிலிட்டரி ஆபிசர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள், குடும்பம் என்று செட்டில் ஆனவர், தற்போது ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி, நித்யானந்த சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்ச்சியன்றில் பக்தகோடிகளில் ஒருவராக முன் வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சிதாவின் கையில் ருத்திராட்ச மாலை! அமைதியே உருவாக இவர் காட்சி தந்தது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. தன்னை சூழ்ந்து கொண்டு பிளாஷ் மழையால் குளிப்பாட்டிய புகைப்படக்காரர்களை கூட அவர் பெரிதாக கண்டு கொள்ளாமல் ஆன்மீக செம்மலாக இருந்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. விடுங்கப்பா... அங்கேயாவது நிம்மதியாக இருக்கட்டும்!

Monday, February 23, 2009

சிறந்த நடிகை-கேத் வின்ஸ்லெட்டுக்கு ஆஸ்கர்


சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சீன் பென்னுக்கும், சிறந்த நடிகைக்கான விருது டைட்டானிக் புகழ் கேதே வின்ஸ்லெட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு படத்துக்கு எக்கச்சக்க ஆஸ்கர் விருதுகளை அள்ளி வழங்குவார்கள். இந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு 8 விருதுகள் வங்கப்பட்டுள்ளன. இந்தியக் கதையை மையமாகக் கொணடு எடுக்கப்பட்ட ஒரு படம் அதிக ஆஸ்கர்களைக் குவிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் ரிச்சர்டு அட்டன்பரோவின் காந்தி படம் 9 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

81-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டதன் முழு விவரம்.

சிறந்த நடிகர்: சீன் பென் (மில்க்)
சிறந்த நடிகை: கேத்தே வின்ஸ்லெட் (தி ரீடர்)
சிறந்த துணை நடிகர்: ஹீத் லெட்ஜர் (மறைந்த நடிகர், படம்: தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பினலோப் குரூஸ் (விக்கி கிறிஸ்டினா பார்சிலோனா)
சிறந்த இயக்குனர்: டேனி பாயல் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த திரைக்கதை: சைமன் பிபாய் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த மூல திரைக்கதை: டஸ்டின் லான்ஸ் பிளாக் (மில்க்)
சிறந்த ஒளிப்பதிவு: ஆன்டனி டோட் மென்டில் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த ஒலியமைப்பு: ரசூல் பூக்குட்டி மற்றும் இயன் தாப் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த ஒரிஜினல் இசை: ஏஆர் ரஹ்மான் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த பாடல்: ஏஆர் ரஹ்மான் - குல்சார் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ் (ஸ்லம்டாக் மில்லினர்)
சிறந்த செய்தி படம்: மேன் ஆன் ஒயர்.
சிறந்த குறும்படம்: மேகன் மிலன் (ஸ்மைல் பிங்கி)
சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம்: டிபார்ட்சர்ஸ் (ஜப்பான்)
சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்: எரிக் பார்பா (தி க்யூரிஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த சவுண்ட எடிட்டிங்: ரிச்சர்டு கிங் (தி டார்க் நைட்)

சிறந்த டாக்குமெண்டர் படம்: மேன் ஆன் வயர் (ஜேம்ஸ் மார்ஷ்)

சிறந்த நேரடி ஆக்ஷன் குறும் படம்: ஸ்பீல்ஜுக்லேண்ட் டாய்லாண்ட் (ஜோகென் அலெக்ஸாண்டர்)
சிறந்த மேக்கப் : கிரே கேனன் (தி க்யூரிஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு: மைக்கேல் ஓ கார்னர் (தி ட்யூசஸ்)

சிறந்த கலை இயக்குநர்: டொனால்டு கிரஹாம் (தி க்யூரிஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த அனிமேஷன் படம்: குனியோ காடோ (தி லா மேஸன் என் பெடிட்ஸ் க்யூப்ஸ்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஆண்ட்ரீவ் ஸ்டான்டன் (வால்-இ)

களம் மாறுகிறேன் 'ஆடுகளம்' பற்றி தனுஷ்


அப்பாடா... தனுஷிடமிருந்து இந்த வார்த்தையை கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. 'ஆடுகளம்' படத்தில் இதுவரை நடிக்காத புது கேரக்டரில் நடிக்கிறேன் என வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.
'பொல்லாதவன்' வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கைக்கோர்க்கும் படம் 'ஆடுகளம்'. இதில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக கவிஞர் ஜெயபாலன் நடிக்கிறார். பூஜை, புனஸ்காரமென்று பந்தா வேலைகளையெல்லாம் செய்யாமல் நேரடியாக படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் வெற்றிமாறன். மதுரையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

கதைப்படி தனுஷ், வீட்டிற்கு அடங்காத தறுதலை. இடையில் ஒரு காதல் அதற்காக வில்லன்களுடன் மோதல். இப்படித்தானே இந்த கதையும் இருக்கும் என்று எகத்தாளம் பேசினால் எரிச்சலாகி விடுவார் தனுஷ். காரணம், முந்தைய தனுஷ் படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையாம் இது. படம் பற்றி மதுரையிலிருந்து தனுஷ் தந்த லைவ் பேட்டி இதுதான்....

"ஆடுகளத்தின் கதைக்களம் மதுரைதான். அதனால் படம் முழுக்கவே மதுரையில் படமாகிறது. மதுரை குடிசை பகுதி இளைஞனாக இதில் நடிக்கிறேன். ரவுடித்தனம் செய்யும் அல்லது சேட்டையான இளைஞன் என சாதாரணமாக இந்த வேடத்தை பற்றி எடை போட்டுவிடமுடியாது. வழக்கமான எனது பாணியிலிருந்து இதில் மாறி நடிக்கிறேன். கல்லூரி மாணவன். அப்பாவிடம் தண்டச்சோறு என திட்டுவாங்கும் மகன் கேரக்டர்களில் நடித்து எனக்கும் போரடித்துவிட்டது பாஸ். அதான் அந்த சாயங்கள் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறேன்.

முதல் முறையாக எனக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாங்க. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணியிருக்கோம். ஆடுகளம் முடிந்ததும் அண்ணன் இயக்கும் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடிக்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் மேட்டர்." போதும்!

முருகதாஸ் இயக்கும் ஷாருக் படம்


2012-ல், 2015-ல் ம்...ஹூம்... முருகதாஸ் எப்போது தமிழ்ப்படத்தை எடுக்கப்போகிறார் என்பது அவருக்கே தெரியாத செய்தி. ஏனெனில் அடுத்தும் அவர் இயக்கப்போவது இந்தி படமே.
அமீரை வைத்து இந்தி 'கஜினி'யையும் ஹிட்டாக்கி காட்டிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்புறமென்ன அம்பானியில் ஆரம்பித்து அரிந்தம் சௌத்ரிவரை பல தயாரிப்பாளர்கள் முருகதாஸிற்கு கொக்கிப்போட்டு வருகின்றனர். எதற்கும் பிடி கொடுக்காமல் சென்னை வந்து சேர்ந்தார் முருகதாஸ். எனவே முருகதாஸின் அடுத்த படம் தமிழ் படமாக இருக்கலாம் என்று பேசப்பட்டது. முருகதாஸின் முதல்பட ஹீரோ அஜித் (தினா) எனவே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என செய்திகள் பரவியது.

இதற்கிடையே ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த இரண்டு வகையான செய்தியில் இரண்டாவது செய்திதான் உண்மையாகவுள்ளது. யெஸ். அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தைதான் முருகதாஸ் இயக்கவுள்ளாராம். ஆரம்பத்தில் இந்த செயதிக்கு பதிலேதும் சொல்லாமல் இருந்த முருகதாஸ், இப்போது மெல்ல தலையாட்டி ஒப்புக்கொள்கிறார்.

தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஷாருக் குணமடைந்து வீடு திரும்பியதும் படத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என தெரிகிறது. இச்செய்தி குறித்து ஷாருக் தரப்பில் கேட்டபோது அவர்கள் சொன்ன பதிலும் பழமாகத்தான் இருந்தது.

"புதிய படம் தொடர்பாக ஷாருக்கானும் முருகதாஸூம் சந்தித்து பேசியது உண்மைதான். ஷாருக்கிடம் ரொமான்ஸ் நிறைந்த ஒரு கதையை இயக்குனர் கூறியுள்ளார். ஷாருக்கிற்கும் அது பிடித்துள்ளது. எனவே அந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி.

இப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா அல்லது கரினா கபூர் நாயகியாக நடிப்பார்கள். ஷாருக்கின் சொந்த படநிறுவனமான ரெட்சில்லி நிறுவனமே தயாரிக்கிறது" என்றனர்.

எம்.ஜி.ஆர். பாடலில் விஜயகாந்த்


எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லாமல் கட்சி நடத்த முடியாது என்ற நிலைமைக்கு விஜயகாந்த் ஏற்கனவே வந்துவிட்டார்.
கொடுமை என்னவென்றால் 25 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவருக்கு ஒரு படத்தை வெற்றிபெற செய்யவும் எம்.ஜி.ஆர். தேவைப்படுகிறார். விஜயகாந்த் நடிக்கும் மரியாதை படத்தை விக்ரமன் இயக்கி வருகிறார். விஜயகாந்த் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இசை விஜய் ஆண்டனி.

இந்தப் படத்தில் டுயட் ஒன்று வருகிறது. இதற்கு எம்.ஜி.ஆரின் பாடலொன்றை பயன்படுத்தலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். அத்துடன் எம்.ஜி.ஆரின் இதயகனி படத்தில் வரும், இன்பமே உந்தன் பே‌ர் பெண்மையோ பாடலையும் சிபாரிசு செய்திருக்கிறார்.

ஹீரோ சொல்லி மறுக்க முடியுமா? இதயகனி படத்தை தயாரித்த ஆர்.எம். வீரப்பனிடம் முறைப்படி அனுமதி வாங்கி விஜய் ஆண்டனி இசையில் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். பாடலில் நடித்தாலாவது அவரது ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்ற விஜயகாந்தின் நப்பாசையில்தான் இந்த ரீமிக்ஸே தயாராகியுள்ளது.
முன்செல்ல

இயக்குனர் லிவிங்ஸ்டன்


நடிகர் லிவிங்ஸ்டன் விரைவில் இயக்குனராக புது அவதாரம் எடுக்கிறார். இதற்காக தண்டச்சோறு என்ற ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் லிவிங்ஸ்டனுக்கு படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக அவர் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்கி‌ரிப்ட்தான், தண்டச்சோறு. புதுமுகங்கள் நடிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் செய்கிறார்.

படத்தின் இன்னொரு விசே­ஷம், லிவிங்ஸ்டனே தண்டச்சோறுக்கு இசையமைக்கிறார். அதே மனிதன், முன்றாம் பவுர்ணமி படங்களில் தலா ஒரு பாடல் பாடியிருக்கும் லிவிங்ஸ்டனுக்கு படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கனவு. தண்டச்சோறில் அந்தக் கனவும் நிறைவேறுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் நம்ம வீட்டு பிள்ளைக்கு கிடைத்த பெருமை-கருணாநிதி


அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.

குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா:

இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரையுலகம் பெருமை அடைந்துள்ளது. தமிழர்கள் தலைமை நிமிர்ந்து நிற்கிறார்கள். உலக அளவில் தமிழன் புகழை கொண்டு சென்ற முதல் தமிழர் அவர். இளைஞர்களுக்கு வழி காட்டியாக அவர் மாறியுள்ளார்.

இவ்வளவு பெருமை யிலும் ஆஸ்கார் விருது பெறும் போது அவர் காட்டிய அடக்கமும் எளிமையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தமிழை மறக்காமல் பேசி இருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். அவரால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.

அந்த மாபெரும் தமிழ னுக்கு தமிழ் திரையுலகம் தந்த கலைஞனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப் படும். திரையுலகில்உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது! -பெருமிதத்தில் தமிழன்!


கோடம்பாக்கம் டூ கொடாக்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்ட அரங்கத்தின் பெயர்தான் கொடாக். தமிழனின் பல்லாண்டு கால கனவை நிறைவேற்றியிருக்கிறார் ரஹ்மான். இவர் இசையமைத்த 'ஸ்லம் டாக் மிலியனர்' படத்திற்காக, ஒன்றல்ல... இரண்டு ஆஸ்கர் விருதுகளை வெற்றிருக்கிறார் நமது இசைப்புயல்!

அந்த பிரமாண்ட மேடையில் அவர் தாய் மொழியான தமிழில் பேசியதுதான் ஒவ்வொரு தமிழனும் கம்பீரம் கொள்ள வேண்டிய விஷயம். 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே நமது தாய் மொழியில் உச்சரிக்க, புரிந்தோ புரியாமலோ அரங்கமே ஆரவாரம் செய்தது.

அதே நேரம் சென்னையில் உள்ள ரஹ்மானின் வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீட்டருகே திரண்டிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த சந்தோஷத்தை கொண்டாடினார்கள்.

இது ஒருபுறம் இருக்க, 'ஸ்லம்டாக் மிலியனர்' படத்திற்கு எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பது உச்சபட்ச சந்தோஷம்! சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த இயக்குனர், ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது!

கன்னித்தீவு இயக்குனர்கள்...? -தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்று கூட சொல்லலாம். 75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தை இத்தனை அடிக்குள்தான் எடுக்க வேண்டும் என்ற சட்டத்தை எந்த திரைப்பட அமைப்பும் எடுத்ததே இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தை அப்படி ஒரு முடிவை நோக்கி தள்ளியிருக்கிறார்கள் ஒரு சில இயக்குனர்கள்.

சமீபத்தில் வெளிவந்த நான் கடவுள் ஆகட்டும், தற்போது முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் ஆயிரத்தில் ஒருவன் ஆகட்டும், எக்கச்சக்க பிலிம்களை விழுங்கி அசுர ஏப்பம் விட்ட படங்கள். இந்த 'கன்னித்தீவு இயக்குனர்களுக்கு' சங்கத்தின் அதிரடி முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். வெறும் 14 ஆயிரம் அடி படத்திற்கு மூன்று லட்சம் அடிகளுக்கும் மேல் எடுக்கும் டைரக்டர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். இனிமேல் பெரிய இயக்குனர்கள், மற்றும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அதிக பட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் அடி வரைக்கும் எடுக்கலாம். குறைந்த பட்ஜெட் படங்கள் அதிக பட்சமாக 75 ஆயிரம் அடிகள் எடுத்துக் கொள்ளலாம். இதை தாண்டி பிலிமை பயன்படுத்தும் இயக்குனர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். தண்டனையும் உண்டு. இதுதான் அந்த முடிவின் சிறப்பம்சம்.

இன்னொரு முக்கியமான விஷயமும் அலசப்பட்டது. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. (ஆனால் சமீபத்தில் தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தது இந்த சிறிய படங்கள்தான். உதாரணமாக சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு) பெரிய படங்களுக்கு Balaமுன்னுரிமை தரும் திரையரங்க உரிமையாளர்கள் சிறிய படத்தை கண்டு கொள்வதே இல்லை. எனவே 80 பிரிண்டுகளுக்கு மேல் போடும் பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை தினங்களிலும், அரசு விடுமுறை நாட்களான ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. (வருடத்திற்கு ஆறு ரிலீஸ் தினங்கள்) சிறிய பட்ஜெட் படங்கள் வாரத்திற்கு இரண்டு ரிலீஸ் செய்யப்படும். அதுவும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் ரிலீஸ். இப்படி முறைபடுத்தப்பட்டால் எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கும்.

ஒரு குறிப்பிட்ட செ.மீ. அளவில்தான் பத்திரிகை விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திடம், தொலைக்காட்சியில் வரும் திரைப்பட விளம்பரங்களுக்கும் அப்படி ஒரு கட்டுப்பாடு தேவை என்று கேட்டுக் கொண்டார்கள் நடிகர் ராதாரவியும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும். இதை ஒரு தீர்மானமாகவே எடுத்துக் கொண்டது சங்கம்.

குருநாதருக்கு கார் பரிசு பாலாவின் பெரிய மனசு!


எளிதில் ரீச் பண்ண முடியாத தூரத்தில் இருந்த பாலா, நான் கடவுளுக்கு பிறகு கூட்டை உடைத்துக் கொண்டு மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்! இப்படி வாயார சந்தோஷப்படுவது மீடியா நண்பர்கள்தான்! சென்னை கிரீன்பார்க் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கும் பாலா, அங்கிருந்தபடியே தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வருகிறார்.

'நான் இத்தனை லட்சம் அடி பிலிமை வேஸ்ட் பண்ணியிருக்கேன் என்று கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்தானே தவிர, மற்றவங்க இல்லே. படம் பார்க்கிற ரசிகனுக்கு எப்படி படம் கொடுத்திருக்கேன் என்பதை பற்றி விமர்சிக்கலாம். பிலிம் வேஸ்ட் பற்றிய கவலை மற்றவங்களுக்கு எதுக்கு?' பேட்டிகளில் கூட இப்படி போட்டுத் தாக்கும் பாலா, யாருக்கும் தெரியாமல் செய்திருக்கும் ஒரு நல்ல காரியம், தனது குருநாதர் பாலு மகேந்திராவுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்திருப்பதுதான்!

அப்படியே சீமானுக்கும் ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். (அந்த காரைதான் தீ வைத்து கொளுத்தினார்கள் சில சமூக விரோதிகள்) குருநாதர் விஷயத்தில் கார் மேட்டர் என்பது அன்பு பரிசு! ஆனால், சீமான் விஷயம் அப்படியல்லவாம். அவரிடம் வாங்கிய கடனுக்காக ஒரு கார் வாங்கிக் கொடுத்தார் என்றும், மாத தவணையை பாலாவே கட்டி வருகிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் ஏரியாவில்!

ரொம்ப பேசாதீங்கப்பு... அகோரிய ஏவி விட்டுற போறாரு?

Sunday, February 22, 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள்!

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

உலகளவில் திரையுலகினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற ஸ்லம் டாக் மில்லினியர் திரைப்படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டது.

இப்படத்தில் இசையமைத்த தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர். ஏ.ஆர்.ரகுமான்.

இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையேறிய ஏ.ஆர்.ரகுமான், விருதை பெற்றபோது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினார்.

இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த ஒலிக்கலவை: இந்தியருக்கு ஆஸ்கார் விருது!

'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்துக்கு சிறந்த ஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. ரெசூல் பூக்குட்டி என்ற இந்தியர் இந்த விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல் நகரில் இன்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லினியர்' திரைப்படம் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளை பெற்றுள்ளது.

அதோடு, சிறந்த ஒலிக்கலவை பிரிவிலும் விருது கிடைத்துள்ளது. இதற்காக இந்தியாவை சேர்ந்த ரெசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

விருதுப் பட்டியல்:

சிறந்த துணை நடிகைக்கான விருது, பென்னலோப் குரூஷ்க்கு கிடைத்துள்ளது.

இந்திய சிறுமியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை 'லா மெய்சன் என் பெட்டிஸ் க்யூப்ஸ்' என்ற திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த உடையலங்காரத்துக்கான விருதை, 'தி டச்சஸ்' என்ற படத்துக்காக மைக்கேல் ஓ கானோர் பெற்றுள்ளார்.

சிறந்த ஒப்பனை (மேக்கப்) பிரிவில் 'தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின்' படம் விருது பெற்றுள்ளது.

கருத்தம்மா ராஜஸ்ரீ திடீர் திருமணம்!


காளஹஸ்தி கோயிலில் கருத்தம்மா ராஜஸ்ரீ ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ராஜஸ்ரீ சென்னையைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் அன்ஸாரி ராஜாவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம் மட்டுமல்ல, கலப்பு மதத் திருமணமும் கூட.

ராஜஸ்ரீயின் இயற்பெயர் மாதவி. கருத்தம்மாவில் அறிமுகமானவர் தொடர்ந்து சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 57 படங்களில் நடித்துள்ளார்.

ஆலயம், அகல் விளக்கு, மந்திர வாசல், சிவமயம் போன்ற டி.வி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

சென்னையிலுள்ள 'பாடி ஷேப்' என்ற ஜிம் உரிமையாளர் அன்ஸாரி ராஜாவை இவர் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்.

கடந்த 19-ம் தேதி முஸ்லீம் மத முறைப்படி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதற்குமுன் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று, தெலுங்கு முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ராஜஸ்ரீ, ரகசிய திருமணம் நடந்ததை தன் பெற்றோரிடம் சொன்னார். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு வேறு வழியில்லை எனப் புரிந்து மனதை தேற்றிக் கொண்டு வாழ்த்தினர். ரகசியமாக காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, இனி நடிக்க மாட்டேன் என்றும், தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

ரஹ்மானும், ஆஸ்கரும்... ஒரு பிரார்த்தனையும்!


விடிந்தால் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிந்துவிடும். நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்'டுக்கு விருது உண்டா இல்லையா என்ற சஸ்பென்ஸும் நீங்கி விடும்.

ஆனால் அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சுருட்ட ஒரு கும்பல் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதுப்புது இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், ஸ்லம்டாக் மில்லியனேர் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும்... என்னென்ன பிரிவுகளில் வாங்கும்? ரஹ்மானுக்கு விருது உண்டா இல்லையா? என சூதாட்டம் நடத்தி பணம் பறித்துக் கொண்டுள்ளன.

இன்னொரு பக்கம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தே தீர வேண்டும்... அவர் தகுதிக்கு முன் ஆஸ்கர் ஒரு பொருட்டே அல்ல, என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன, தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுவைப் பகுதியிலிருந்து.

காரைக்காலைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தே தீர வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனாயில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயங்கள், அம்மன் கோயில்கள், மசூதிகளில் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

அது என்ன ரஹ்மான் மீது மட்டும் இந்த தமிழர்களுக்கு இத்தனை பாசம்?

2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியை உலகம் உள்ளளவும் மறந்துவிட முடியாது. அன்றுதான் இயற்கை சுனாமி வடிவில், தான் படைத்த மனித சமுதாயத்தையே பெருமளவு விழுங்கி கோபம் தணித்துக் கொண்டது.

அரசு ஆயிரம் உதவிகள் தந்தாலும், அந்த மனிதப் பேரவலத்திலிருந்து மக்கள் மனம் அத்தனை சுலபத்தில் இயல்புக்குத் திரும்பவே இல்லை.

அந்த சூழலில்தான் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் தனது குழுவினருடன் காரைக்காலுக்கு அருகில் உள்ள கோட்டுச்சேரிமேட்டில் வந்திறங்கினார். அவருடன், அவரால் பிரபலமடைந்த இசைக் கலைஞர்கள் ஹரிஹரன், கார்த்திக், சின்மயி மற்றும் டிரம்மர் சிவமணி ஆகியோரும் வந்திருந்தார்கள்.

திறந்த வெளி மணல்பரப்பையே மேடையாக்கி ரஹ்மானும் அவரது குழுவினரும், சுனாமியால் நைந்து போயிருந்த அந்த கடல்புரத்து மக்கள் மனங்களை தங்கள் இசையிழைகளால் நெய்தார்கள்... ஆம்... நெய்தலில் ஒரு இசை நெய்தல் நடத்தினார் ரஹ்மான்.

இரண்டரை மணி நேரம்... அந்த மக்கள் இழந்த எதையோ ஒன்றைத் திரும்பப் பெற்றதாய் சந்தோஷம் கொண்டார்கள்.

இந்த உலகில் வேறு யாரும் செய்ய முடியாத அரிய சாதனை அது. கடவுளால் மட்டுமே கொடுக்க முடிந்த ஆத்ம சந்தோஷத்தை ரஹ்மான் என்ற கலைஞர் தந்தார், சுனாமி பாதித்த அந்த மக்களுக்கு.

அந்த தருணத்தையும், ரஹ்மான் தங்களுக்குத் தந்த அந்த அன்பு இசைப் பரிசையும் மக்கள் அத்தனை சுலபத்தில் மறந்துவிடவில்லை.

இதோ... அடுத்த 24 மணி நேரத்தில் ஆஸ்கர் மேடையில் ரஹ்மானும் நிற்கக் கூடிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடல்புரத்து மக்கள் அனைவரும்.

'எங்களின் பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் கேட்பார்... நல்ல பிரார்த்தனைகளுக்கு தோல்வி கிடையாது', என்கிறார்கள் கோட்டுச்சேரிமேடு மக்கள் கேரஸாய்.

இது கோட்டுச்சேரிமேடு மக்களின் பிரார்த்தனை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனையும் கூட!

தொட்டா... அவ்ளோதான்! - சார்மி


ரசிகர்களை மகிழ்விக்க எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை என்கிறார் நடிகை சார்மி, விஜய்காந்த் மாதிரி நாக்கைக் கடித்தபடி.

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் டி.ராஜேந்தரால் கதாநாயகியாக்கப்பட்ட சார்மி, சிம்புவின் ஜோடியாக முதல் படத்திலேயே லிப் டு லிப்பில் இறங்கி அதிர வைத்தார்.

இவரது திறமையைப் பார்த்த தெலுங்கு ஓல்டு நடிகர்கள் ஆந்திராவுக்கு இழுத்துச் சென்றுவிட்டனர். அங்கே வயதான நடிகர்களுடன் கவர்ச்சியின் எல்லைகளை விஸ்தரித்த சார்மி, ஆந்திராவின் முன்னணி நாயகியாகிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப்பின், லாடம் என்ற தமிழ் படத்தில் குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படத்தைப் பார்ப்பதற்காக சென்னை வந்த சார்மி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

காதல் அழிவதில்லை படத்துக்குப்பின், எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. தெலுங்கு படங்களில் பிஸியாகி விட்டதால், தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. லாடம் டைரக்டர் பிரபு சாலமோன் ஹைதராபாத் வந்து, இந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் சம்மதித்தேன்.

தெலுங்கு படங்களில் நான் மிக கவர்ச்சியாக நடிப்பதாக சொல்கிறார்கள். அதில் தப்பு என்ன இருக்கிறது? உடம்பை காட்டினால்தான் தப்பு. ரசிகர்களை மகிழ்விக்க அதிகமாக கவர்ச்சி காட்டினால் தப்பே இல்லை. ஆபாசம் தான் தப்பு என்றார்.

ஆந்திராவில், கதாநாயகிகள் மீது வெறிபிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். சில கதாநாயகிகளை ரசிகர்கள் கட்டிப்பிடித்த சம்பவங்கள் எல்லாம் அங்கே உண்டு. உங்களை யாராவது திடீர் என்று கட்டிப் பிடித்தால், என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு,

இந்தியா ஜனநாயக நாடு என்பதற்காக, யாரும் யாரையும் தொடுவதற்கு உரிமை இல்லை. நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவர்கள், அந்த படத்துடன் தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் வெளியே எதிர்பார்க்க கூடாது. என் அனுமதி இல்லாமல், யாராவது என்னை தொட்டால், அவர்களை மன்னிக்க மாட்டேன் என்றார்.

உங்கள் முதல் பட நாயகன் சிலம்பரசனுடன் இன்னமும் நட்பு வைத்திருக்கிறீர்களா?

அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார் சார்மி.

17 ஆண்டு பழைய ரஜினி படம், இப்போது தமிழில்!

ஒருபக்கம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா… இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இடையில் 'அரசன்- தி டான்' என்ற வாசகங்கள் பொறித்த போஸ்டர்கள் சென்னை நகரம் முழுக்க கலக்கி வருகின்றன இந்த ஒரு வாரமாக...

ரஜினி எப்போது இந்த 'புதிய படத்தில்' நடித்தார் என்ற கேள்வியோடு ரஜினி ரசிகர்கள் பல இடங்களிலும் மேல் தகவலுக்காக விசாரித்த வண்ணமிருந்தனர். ஆனால் ஒருவருக்கும் விஷயம் தெரிந்தபாடில்லை. அந்த அளவு ரகசியம் காத்து வந்தார் இந்தப் படத்தின் 'தயாரிப்பாளர்' குளஞ்சியப்பன்.

அவரிடம் விசாரித்தோம். அவர் கூறியதிலிருந்து...

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்திப் படமான 'கூன் கா கர்ஸ்' ('ரத்தத்தின் கடன்') தான் இந்த 'அரசன்-தி டான்'.

இந்தப் படத்தை அரசன்- தி டான் என தமிழில் வெளியிடுகிறோம். ரஜினி சாரின் மிகச்சிறந்த ஆக்ஷன் காட்சிகள் மக்களைக் கவரும் என்பதாலும், அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதாலும் இந்தப் படத்தை இப்போது வெளியிடுகிறோம்.

இந்தப் படத்துக்கு ஒரு பக்கம் ஒபாமா, மறுபக்கம் ரஜினி சார் படங்களை வைத்து பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்திருந்தோம். இன்னும் பிரமாண்டமாக பேனர்கள் வைக்கப் போகிறோம். ஒரு புதுப்படத்துக்கான அத்தனை ஏற்பாடுகளுடனும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்.

சரி… இந்தப் படம் ஒரு மொழிமாற்றுப் படம் என்பதைச் சொல்லி விட்டீர்களா ரசிகர்களிடம்?

இது அவர்களுக்கே தெரியும் (!!!!). நாங்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தப் படத்தை அவரது தீவிர ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

இன்னொன்று விரைவில் பிரஸ் மீட் வைத்து இந்தப் படம் குறித்து அறிவிக்கப் போகிறோம். அப்போது விரிவாக சொல்லிவிடுவேன், என்றார். மார்ச் மாதம் படம் வெளியாகிறதாம்.

முகுல் எஸ் ஆனந்த் (குதா கவா போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர்) இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், வினோத் கன்னா, சஞ்சய் தத் என மூன்று ஹீரோக்கள். இந்திப் படம் என்பதால் வினோத் கன்னாவுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் இந்தப் படத்தில்.

டிம்பிள் கபாடியா, கிமி கட்கர் மற்றும் சங்கீதா பிஜ்லானி என மூன்று நாயகிகள். வில்லனாக காதர் கான் நடித்திருந்தார். படத்தின் கதை பக்கா மசாலாவாக இருந்தாலும் சுவாரஸ்யமானது.

தளபதி படம் வெளியான காலத்தில் தயாரான படம் இது. எனவே ரஜினியின் லுக்ஸ் தளபதி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலுமிருக்கும்.

தமிழ் சினிமாவை கோலிவுட் என அழைக்காதீர்கள் - கமல்ஹாசன்


தயவு செய்து தமிழ் திரையுலகை இனி கோலிவுட் என அழைக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.கலைஞர் டி.வி. குழுமத்தின் புதிய சேனலான சிரிப்பொலியை நடிகர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். இதே குழுமத்தின் இசையருவி சேனலின் முதலாண்டு விழாவும், சிரிப்பொலி என்ற புதிய சேனலின் தொடக்க விழாவும் நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது.

இதில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு சிரிப்பொலி சேனலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

'ஸ்ருதிக்கும் எனக்கும் பிரச்சினையில்லை!'

எனக்கு கிடைத்த இசை வாத்தியார்கள் ரொம்பவும் நல்லவர்கள். திறமையானவர்கள். நான் ஆரம்பத்தில் பாடும்போது சுருதி சரியாக வரவில்லை என்றார்கள். அதன்பிறகு 'ஸ்ருதி' (கமலஹாசனின் மகள்) தவழ்ந்து, வளர்ந்து, பெரியவளாகி விட்டாள். அதனால் இப்போது ஸ்ருதிக்கும் எனக்கும் பிரச்சினையும் இல்லை.

ஆரம்பத்தில், நான் மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரங்களில் இளையராஜா ஒரே நேரத்தில் என்னை 2 பாடல்களை பாட அழைத்தார். அந்த பாடல்களில் என்னையும் அறியாமல் மலையாளம் கலந்திருந்தது. (பன்னீர் புஷ்பங்களே... என்ற பாடலை பாடிக் காட்டினார்). அப்புறம்தான் மாறியது.

இங்கு எல்லோரும் தமிழ் சினிமா உலகை கோலிவுட் என்றும் இந்தி படஉலகை பாலிவுட் என்றும் அழைக்கிறார்கள். தயவு செய்து தமிழ் பட உலகை கோலிவுட் என்று அழைக்காதீர்கள்.

தமிழ் திரையுலகம் என்றோ அல்லது சென்னை பிலிம் இண்டஸ்டிரி என்றோ அழையுங்கள். கோலிவுட் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.

எனது சின்ன வயதில் நான் தவறு செய்து விட்டால் அப்பா, என்னை "காலிப் பயலே, காலிப் பயலே' என்றுதான் திட்டுவார். அதனால் கோலிவுட் என்பது என் காதுகளில் காலிப்பயலே என்று சொல்வது போலத்தான் கேட்கிறது.

நகைச்சுவை சேனல் நிகழ்ச்சி என்பதால் இதை நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது சீரியசாகவும் எடுத்துக் கொள்ளலாம், என்றார் கமல்.

விழாவில் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், பட அதிபர்கள் அபிராமி ராமநாதன், ஆர்.பி.சவுத்ரி, நடிகர்கள் நெப்போலியன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, மனோபாலா, பாடகர்கள் உன்னிமேனன், கிரிஷ், இசையமைப்பாளர் சிற்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலைஞர் டி.வி.குழுமத்தின் பொது மேலாளர் பெரைரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நடிகர் விஜய் ஆதிராஜ் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Followers