Tuesday, January 6, 2009

சீமான் பாரதிராஜா சந்திப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி


விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய விவகாரத்தில் சிறை சென்றிருக்கும் சீமானை திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் சென்று சந்திக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாரதிராஜா பார்க்க வரவில்லை என்று சீமான் வருந்தியதாகவும் தகவல்கள் உலவின. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கோவை சிறையில் இருக்கும் சீமானை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் இயக்குனர்கள் பாரதிராஜாவும், செல்வமணியும்.

அங்கு நிருபர்களை சந்தித்த பாரதிராஜா பேசியதாவது- ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லும் உரிமை எல்லாருக்கும் உண்டு. விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசலாமா, கூடாதா என்று சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது தெளிவாகிவிடும். இலங்கை தமிழர்களுக்கு திரைத் துறையினர் மட்டுமில்லாமல் தமிழ் சமுதாயம் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதையும் மீறி தமிழ் திரைப்பட துறையினருக்கு விடுதலைப்புலிகள் நிதி கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியிருப்பது மத்திய அரசை களங்கப்படுத்துவது போன்றது. இந்த குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிராஜா கூறினார்.

0 comments:

Followers